இவர்தான் அண்ணா

நிலமை என்னை உண்டாக்கிற்று!
நிந்தனை என்னை வளர்கிறது!
நிலமையை நான் உண்டாக்கவில்லை!
நிந்தனை எனக்குப் பழக்கமற்ற காரியம்!
(16.10.1949)

என்னிடம் சில குறைபாடுகள் உண்டு, குறைபாடுகள் என்று சம்பிரதாய முறையில் கூறுகிறேன். அதில் ஒன்றுதான் கனவு காண்பது, பொதுப்பிரச்சனைப்பற்றி. மற்றொன்று மிகக் கஷ்டமான நெருக்கடியின்போது சர்வ சாதாரணமாகக் கருதிக்கொண்டு சிரித்துக்கிடப்பது . . .

. . . சிரிக்கத் தெரியாமல் இருந்திருந்தால் எனக்கு பொது வாழ்க்கையிலே ஏற்பட்ட சங்கடங்களால் பைத்தியமே பிடித்துவிட்டிருக்கும். குழப்பமடைந்து போகாமலிருக்க அது தகுந்த முறையாக அமைந்திருந்தது.
(08.09.1955)

உண்மையில் கூறுகிறேன். நமது இயக்கத்தைவிட்டு யாராவது பிரிந்து செல்கிறார்கள் என்றால் வருத்தந்தான். கூடுமானவரையில் கூடிவாழ்வதைத்தான் நான் விரும்புகிறவன். சுவரிலிருந்து சிறு ஆணி பெயர்க்கப்பட்டாலும் ஆபத்து இல்லை என்றாலும் பார்க்க நன்றாக இராது என்று எண்ணுபவன்.
(22.05.1955)

என்னை பொறுத்தவரையில் தம்பி! நான் அங்குஇருந்தபோது (பெரியாரிடம்) கிடைத்த பாடத்தைவிட அரும் பெரும்பாடத்தை இப்போது குருபீடத்திலிருந்து பெறுகிறேன். ஏசல் கணைகள் மூலம் - என் உள்ளம், தாங்கும் சக்தியை மிகத் திறம்படப் பெற்று வருகிறது. எனவே தான் என்னால் மாற்றுக் கட்சிக்காரரிடம் மனமாச்சரியம் துளியும் கொள்ளாமல் கொள்கைகளை எடுத்துச் சொல்லும் பக்குவம் நிரம்பத் தேவைப்படும் வகையான பணியாற்றும்படி உன்னை கேட்டுக்கொள்ள முடிகிறது. அண்ணனுக்குக் கிடைத்துள்ள மனப்பாங்கு தம்பிக்கு உண்டு என்ற நம்பிக்கையுடன்தான் இவ்விதம் கூறுகிறேன்.
(03.07.1955)

ஏட்டில் தம்பி, நான் ஏட்டிலே(அந்தனி ஜான் எனும் புததகம் - எழுதியவர் ஜெரொம். கே. ஜெரோம்) சந்தித்த துறவியை நாட்டிலே காண விழைகிறேன். உனக்கும் அப்படித்தான் தோன்றும், தேடினால் கிடைப்பார்களா என்று எண்ணுவதைவிட, தம்பி நாம் அப்படிப்பட்ட "துறவிகளாகிவிட வேண்டும். குடும்பம் இருக்கும், குடிகெடுக்கும் எண்ணம் இருக்காது. துணைவி இருப்பாள், நமது தொண்டுக்குத் துணைபுரிய. குழந்தைகள் இருக்கும், அன்புக்கான அரிச்சுவடியை உணர்த்த. தொழிலில் ஈடுபடுவோம். வாழ்க்கை நடத்த, ஆனால் உடமைகளுக்குக் கட்டுப்பட்டுவிடாமல், தன்னலத்துக்கு ஆட்பட்டுவிடாமல், சுகபோகத்திலே ஆழ்ந்து விடாமல், வலியோர் சிலர் எளியோர்தமை வதையே புரிகுவதா, என்ற கேட்கும் ஆற்றலையும், அத்கைய கேட்டினைக் களைந்திட அறப்போர் நடாத்தும் திறத்தினையும் பெற்ற, மடம் தேடாமல், தாவடம் அணிந்த சடம் ஆகாமல், காவி, தேடாமல், அதனுள் மறைந்திடும் காமி ஆகாமல், தொண்டாற்றும் துறவியாக, மோட்ச சாம்ராஜ்யத்திலே இடம் பிடிக்க அல்ல நமது இதயத்திலே அன்புக்கு, இடமளித்து, அறநெறியை நாட்டிலே புகுத்தி, மக்களைப் புதியதோர் இன்பம் பெறச் செய்யும் புனிதத் தொண்டாற்றும் துறவியாக வேண்டும். நாட்டிலே இத்தகைய துறவிகளேஇன்று அவசரமாகத் தேவை. ஏழையின் அழுகுரலை எளியோரின் கண்ணீரை பதிகம் பாடியும் மணி அடித்தும் போக்கிட முடியாது, தம்பி! முடியாது. துறவிகள் வேண்டும், புதிய துறவிகள். வெள்ளை உடை போதும். காவி தேடி அலைய வேண்டாம். காவிகளைத்தான் பார்க்கிறோமே!
(04.09.1955)

எப்போதும் எனக்கு இனிப்பு அதிகமாக இருப்பதை விட காரம் சற்று அதிகமாக இருப்பது பிடித்தம்தான்.
(05.02.1956)

(1938ல் போராட்டத்தில் கலந்து தண்டனையை எதிர்பார்த்து நீதிபதி முன் நிற்கும் அண்ணா) "நான்கு மாதம் என்றால் மாஜிஸ்ரேட் நாலு மாதம் என்று லேடி டாக்டர் கூறுவது கேட்டு மகிழும் ஆரணங்குபோல் ஆனேன்" என்கிறார்.
(31.07.1955)

நமக்கு அப்படி ஒரு பழக்கத்தை பெரியார் ஏற்படுத்திவிட்டதாலே இந்த தொல்லை. யார் கூறினாலும் பொருள் இருக்கிறதா? பொருத்தம் இருக்கிறதா? முன் பின் சொன்னதற்கு முரணாகாமல் இருக்கிறதா? மூலக் கருத்தினை கெடுத்திடாத வகையில் இருக்கிறதா என்றெல்லாம் பார்க்கச் சொல்கிறது.
(09.10.1955)

ஊர்வலம் என்றாலே எனக்குப் பிடிக்காது என்பதையும், நமது கழகத் தோழர்கள் ஆர்வத்துடன் அவ்வப்போது நடத்தும் உற்சாகமான ஊர்வலத்தின்போது என்னைத் தேடிப்பிடித்து இழுத்து வந்தாலும், நான் ஓடி ஒளிந்துகொள்பவன் என்பதும் உனக்குத் தெரியும்.
(11.03.1956)

நமது உள்ளத்தில் தூய்மையிருந்தால் தூற்றல் பற்றி நமக்கென்ன கவலை அது நம்மை என்ன செய்துவிடும்?
(29.04.1956)

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by Anna Peravai, Chennai, Tamil Nadu.